வெள்ளி, 1 ஜனவரி, 2010

மனதில் சுழலும் இசைத்தட்டுக்கள்

அதிகாலையில் உங்கள் செவியில் விழும் இசை அன்று முழுவதும் மனதில் ஓடிக்கொண்டிருப்பதை அனுபவித்திருக்கிறீர்களா?


பள்ளிப்பருவத்தில் தந்தை துயில் எழுப்பியவுடன் நிதமும் திருச்சி வானொலியில் தவழும் பாமாலைதான் காதில் விழும். ஒரு நாள் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” அல்லது “வினாயகனே வெவ்வினையை வேரருக்க வல்லான்” மற்றொரு நாள் “இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை”இன்னொரு நாள் “ஆரோக்கிய மாதாவே, உனது புகழ் பாடித் துதிக்கின்றோம்” என ஒவ்வொரு நாள் முதலில் கேட்ட பாடல் அன்று பள்ளி சென்று பாடங்களில் மனம் பதியும் வரை மூளைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். சில நாட்களில் பள்ளிக்குச்செல்லுமுன் காலை 08:30 மணி திரை இசை கேட்க நேர்ந்தால் “மலரே, குறிஞ்சி மலரே”வோ, “ நாளை நமதே”யோ,”கல்யாண வளையோசை கொண்”டோ அல்லது “அந்தமானைப் பாருங்கள் அழகு” (இதில் ஏதேனும் ஒன்று அவசியம் இடம் பெறும்) பாமாலையின் இடத்தை பிடித்துக்கொண்டு விடும். பின்னர் பாலிடெக்னிக் ஹாஸ்டல் வளாகத்தில் ஞாயிறு வார விடுமுறையன்று காலை எட்டு மணிக்கு மியூசிக் செக்ரெடரி அனைவரையும் துயில் எழுப்ப மீட்டுவது” செந்தூரப் பூவே, செந்தூரப் பூவே, சில்லென்ற காற்றே” அல்லது “ஜப் தீப் ஜலே ஆனா, ஜப் சாந்த் லே ஆனா” அல்லது “ஜானே மன் , ஜானே மன்” தான் அன்றைய தின மன இசை.
பொறியியல் கல்லூரி நுழைவு/ நேர்முக தேர்விற்க்கான பயணம் மனதை வருடும் இசையில் புதிய மைல்கல்.ஆம். அப்போதுதான் பேருந்துகளில் பயணத்தின் போது இசை நாடாவிலிருந்து பாடல் கேட்டபடி பயணிப்பது அறிமுகமாகியிருந்த சமயம். பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு “அம்மன்” பஸ் சர்வீஸில் பாடலுடன் பயணம் செய்வதற்காகவே தந்தையிடம் அடம் பிடித்து அதிகாலையில் இரண்டு மணி நேரம் முன்னதாக சென்றபோது கேட்ட “ இலக்கணம் மாறுதோ, இலக்கியம் ஆனதோ” பாடல் அன்று முழுவதும் ஆக்ரமித்துக் கொண்டிருந்ததோடு மட்டுமின்றி,அன்றைய வெற்றியினால் எனது அதிர்ஷ்டப் பாடலாகவும் ஆகிப்போனது. எப்பொழுது அந்த பாடல் கேட்டாலும் அன்றைய தினம் வெற்றியே எனவும் ஆகியிருந்தது.
பொறியியல் கல்லூரி ஹாஸ்டல் நாட்களில் காலை வாக்கிங் சமயத்தில் கேட்டது பல நாட்கள் டீக்கடை இசையில்“ஷஷ்டியை நோக்க சரவண பவனார்”தானெனினும்,சில சமயம் அத்தி பூத்தற்போல் பக்கத்து அறை சென்னை மாணவர் (நமக்கு எங்க ஆங்கில பாடல் ஒலி நாடாவெல்லாம்?)அதிகாலையிலெயே தவழ விடும் ”BoneyM-ன் ரஸ்புடீன்” அல்லது “ ABBA-ன் சூப்பர் ட்ரூப்பர்”கூட பரிச்சயமாகியது.
இப்படியே இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்:
வேலை தேடி கல்பாக்கத்திற்கு இரவெல்லாம் பயணித்து விடியலில் செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் சதுரங்கபட்டிணம்(சட்ரஸ்?) செல்லும் முதல் பேருந்துக்கு நிற்கையில் கேட்ட
ஜேசுதாஸின்”சரக்கொன்றை பூத்திருக்கு”
ஆந்திராவில் பணியாற்றிய போது நல்கொண்டாவில் தங்கியிருந்த விடுதியில் ஒலிக்கும் “எந்தரோ மஹானு பாவா”
புதுடில்லியில் பணியாற்றிய போது காலையில் OKLA INDUSTRIAL ESTATE- லிருந்து பதர்பூர் செல்லும் போது கேட்ட “ ஓம் ஜெய் ஜெஹதீஸ் ஹரி”
அவ்வளவு ஏன்?
மண நாள் அன்று மாப்பிள்ளை அழைப்பின் போது பிள்ளையார் கோயிலில் இசைக்கப் பட்டுக் கொண்டு இருந்த “ ஷீராப்தி கன்யககு ஸ்ரீ மஹா லக்‌ஷ்மிகினி நீராஜனம்”
முதல் தீபாவளியன்று மாமனார் வீட்டு டீவியில் எம்.எஸ்.உருகிய( மனதை உருக்கிய?)
“பஜ கோவிந்தம்”
எனது செல்ல மகள் பிறந்த கணத்தில் மனதில் ஓடிக்கொண்டிருந்த “குறையொன்றுமில்லை”
சென்ற ஆண்டு அமீரகத்தில் பணியாற்ற வந்திறங்கிய ஒரு கோடையின் அதிகாலையில் அழைத்துச் செல்ல வந்திருந்த நேபாளி ஓட்டுனர் நண்பர் சுழல விட்ட நேபாளப் பாடல்
இப்படி எத்தனையோ இசைத்தட்டுக்கள்...........................எனினும் இப்பொழுது அமீரகத்தை விட்டு
ஒமீரகத்தில்( அரபு நாடுகள் அமீரகம் என்றால் ஓமன் நாடு ஒமீரகம்தானே?) பணியாற்றும் வேளையில் காலை ஐந்தரை மணிக்கு ” அல்லாஹூ அக்பர்,அல்லாஹூ அக்பர்.....................லா இலாஹா இல் அல்லாஹ்” என்று தொழுகைக்கான அழைப்பே நாள் முழுதும் மனதில் சுழல தொடங்கி விட்டது....... ஐந்து முறையும் கேட்பதால்!!!!!!

வியாழன், 31 டிசம்பர், 2009

இன்று புதிதாய்ப் பிறந்தேன்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நான் வலைப்பூவிற்கு இன்று புது வரவு.

பல தினங்களாய் தமிழிஸ் படித்த பின் நாமும் ஒர் வலைப்பதிவர் ஆக வேண்டும் என்ற ஆவல்
உந்த பதிவர், சி.பாலாஜி அவர்கள் உதவியால் இன்று பிள்ளையார் சுழி.

நண்பர் பாலாஜிக்கு நன்றிகளும் அவருடைய கொங்குத் தமிழுக்கும் மற்றும் “ என்னைக்கூட விவரம் கேட்டதுக்கே நன்றி சொல்லனும் சாமி”க்கும் எனது வணக்கங்கள்.

நண்பர்கள் அனைவரும் ஆதரவு தந்து (அதாங்க ஓட்டு போட்டு ) வளர வைக்க வேண்டிக் கொண்டு,
சித்திரப்பிரியன்